×

திருப்பதிக்கு இணையான பலன் அளிக்கும் அத்தாளநல்லூர் கஜேந்திர வரதபெருமாள்

தாமிரபரணி நதிக்கரையில் அருள்பாலிக்கிறார்நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூர் கஜேந்திர வரதபெருமாள்கோயில் யானைக்கு மகாவிஷ்ணு வரம் அளித்த வரலாற்று சிறப்பு மிக்க தலம் ஆகும். இந்திரத்துய்மன் என்ற மன்னன் அகத்தியரின் சாபத்தால் யானை வடிவம் பெற்றான். அந்த யானை கஜேந்திரன் என்ற பெயருடன் யானைகளுக்கெல்லாம் தலைமை தாங்கியது. இந்த கஜேந்திரன் பொதிகை மலைக்கு சென்று அங்கு தீர்த்தத்தில் நீராடி சூரியனை வணங்கி குற்றாலத்திற்கு சென்று சிவமது கங்கையில் நீராடி திருக்குற்றாலநாதரை வணங்கிய பின் மகா விஷ்ணுவை வணங்குவதற்காக அத்தாளநல்லூருக்கு வந்தது.அத்தாள நல்லூரில் உள்ள தாமரைகுளத்தில் நீராடி தாமரைப் பூக்களை பறித்து திருமாலுக்கு சூட்ட எண்ணியது. தாமரை பறிக்கும்போது நாதமுனிவரின் சாபத்தால் முதலை வடிவம் கொண்ட ஊர்த்துவன் என்கிற கந்தர்வன், கஜேந்திர யானையின் காலை பிடித்துக்கொண்டான். யானை எவ்வளவோ முயன்றும் முதலை தன்பிடியைவிடவில்லை. யானை துதிக்கையில் தாமரையை வைத்து ஆதிமூலமே என்று அழைத்தது. மகாவிஷ்ணு கருடவாகனத்தில் வந்து தன் சக்ரா யுதத்தால் முதலையை கொன்று யானைக்கு அருள்பாலித்தார்.இதன் காரணமாக இந்த தலம் யானைக்கு அருள் செய்த தலம் எனவும் ஆனையைக் காத்த தலம் என்றும் அழைக்கப்படுகிறது.அத்தி என்றால் யானை. யானையை ஆட்கொண்டதால் அத்தாளநல்லூர் என்று இந்த ஊர் பெயர்பெற்றது. கல்வெட்டுகளில் இந்தஊரை அத்தாணி நல்லூர், கரிகாத்தபுர, பொய்மாம் பூம்பொழில் என்றும் இத்தலத்து கடவுளை ஆனைகாத்தருளிய பிரான் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.பெருமாள் யானைக்கருள் செய்த திருவிளையாடல் நடந்த வரலாற்றுடன் தொடர்புடையதாக இந்தியா முழுவதும் 24 தலங்கள் குறிப்பிட்டப்பட்டாலும் மத் பாகவதத்தில் கஜேந்திர மோட்ச திருவிளையாடல் பொதிகை மலையடிவாரத்தில் நடந்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே இதுவே கஜேந்திர மோட்சத்தலமாகும். தாமிபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இத்திருத்தலம் பரிகாரத்தலம் என்ற புனிதம் பெற்றது. திருக்கோயிலின் மேற்கே தாமிரபரணி தெற்கு வடக்காகப்பாய்கிறது. இதனால் இந்த தீர்த்த கட்டம் கங்கைக்கு நிகரானது. நின்ற கோலத்தில் காட்சி தரும் இப்பெருமானை வழிபடுவதால் திருப்பதியில் வழிபட்ட பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கோயில் பின்பகுதியில் தாமிரபரணி நதி உள்ளதால் ஒரு தூணில் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாக கருதப்பட்டு அந்த தூணே நரசிம்மராக கருதி வழிபடப்படுகிறது. இந்தத்தூணிற்கு சந்தனம் மற்றும் மல்லிகை மலர்களால் ஆன சட்டை சாற்றுதல் என்கிற நேர்த்திக்கடன் பக்தர்களால் செய்யப்படுகிறது.இக்கோயிலில் தினமும் காலை 5.30 மணி முதல் 10 மணிவரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரையிலும் நடை திறக்கப்பட்டிருக்கிறது. தினமும் நான்குகால பூஜைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையும் ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தியும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியும் தைப்பூச திருவிழாவும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் இருந்து முக்கூடல் செல்லும் சாலையில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு முக்கூடலில் இருந்து பஸ்வசதி உள்ளது. அருகே வீரவநல்லூர் ரயில் நிலையம் உள்ளது….

The post திருப்பதிக்கு இணையான பலன் அளிக்கும் அத்தாளநல்லூர் கஜேந்திர வரதபெருமாள் appeared first on Dinakaran.

Tags : Atthalanallur Gajendra ,Tirupati ,Atthalanallur Gajendra Varathaperumal ,Veeravanallur ,Tamiraparani river ,Arulpalikalanalanellai district ,Maha Vishnu ,
× RELATED திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்...